காய்ச்சிய இருப்புக் கம்பியை
இதயத்தின் இடம் விட்டு
வலம் எடுப்பதாய்
அந்த வலியிலும் ஒரு இன்பம்
சில நொடிகளுக்கு முன்
குருதியிலிருந்து ஹீமோகுளோபின்
இப்போது அண்டார்டிகாவிற்கு பயணமாயிற்று….
பாதத்தின் பெருவிரல் முதல்
தலைமுடியின் நுனி வரை
உயரும் குளிர்வு…
செயற்கையாய் குளிர் காய்ச்சலை
எமதுடம்பில் கொண்டு வர
எந்த கல்லூரியில் சென்றடி
மருத்துவம் கற்றது உன் விழிகள்….
இரவிலும் கண் கூசுகிறது
கனவிலும் அது தொடர்கிறது
கவிஞர்கள் உருகியதன் காரணம்- உன்
கருவிழி கண்டநொடி அறிந்தேன்…
பாரதி மட்டும் இருந்திருந்தால்
உந்தன் விழிபார்த்து
செந்தமிழ் விழிபாட்டு எழுதியிருப்பான்…
இதயத்தின் மகிழ்வையும்
அழகு உதடுகளின் மெளனத்தையும்
உந்தன் விழிகளில் ஏற்றி
முரைப்பதாய் சில்மிசம் செய்து
நீ தோற்கையில்
அந்த கண்களில் தெரியுமடி
பேரானந்தத்தின் தீர்க்க தரிசனம்….
கணிதத்தில் எந்த தேற்றம் இது
வேதியியலில் எத்தகு மாற்றம் இது
இலக்கணத்தில் இல்லாத பிரிவு இது
வரலாறில் வராத புரட்சி இது….
-சரவணன் கந்தசாமி
No comments:
Post a Comment