வருசநாடு வனாந்திரம்
வழிமொழிந்த பத்திரம்
கருங்கல் உடைத்து கலங்கிப்
பொங்கிய கட்டுடல் நீர்மம்…
மெல்ல ஆடி வருகுது
சொல்ல தேடி வருகுது
வைரமுத்து தெளித்த மையென
வெல்ல ஓடி வருகுது
வைகை என்னருகே…
நாகரீக தோன்றலின் அடி நாதம்
நளினம் அதில் நீ ஆட
பண்புத் தமிழின் பெருவாரி
வளமை கொடுத்தது நீயே…
தேனியில் பிறந்த நீ…
மதுரையில் தவழ்ந்த நீ…
கங்கைச் சீமையில் மகிழ்ந்த நீ…
ராமநாத புரத்தில் ரம்மியமானாய்…
பயிர்களுக்கு செந்தேனானாய்…
கவிதைகளில் உன் கட்டழகை
கருவுறச் செய்யவுள்ளேன்
என்னருகே நீ வந்து
எடுத்தியம்ப உன் கதையை
வைகையே எழுந்து வா…
தூங்கா நகர தாக விலக்கே
தத்துவம் சொல்ல எழுந்து வா…
வறட்சிக்கு மிரட்சி கொடுத்து
செழுமை செப்பனிடக் கொடுத்து
நித்தம் எந்தன் வயிறு
நிறையிட்ட உந்தன் ஈகை
சொல்ல எழுந்து வா…
இனமிருப்பின் வாழ்வுண்டு
மொழியிருப்பின் வார்த்தையுண்டு
முயற்சியிருப்பின் வெற்றியுண்டு
நீ இருப்பின் எல்லோருக்கும் உயிருண்டு…
அன்னையவள் அன்பின் தேகம்
வைகைத் தாயவள் –எங்கள்
வரிய உயிரின் தாகம்…
தொழில்நுட்பத்தில் தொலைந்த
மானிட அறிவுக்கு – உந்தன்
அழகு பெருமை அள்ளித் தர
வைகையே எழுந்து வா…..
-சரவணன் கந்தசாமி
No comments:
Post a Comment