வகுப்பறை
சத்தங்களால் முத்தமிட்டு
தொடங்கிய பாடம்
கிறுக்கச் சொன்ன
எழுதுகோல் வாசனை…
கரங்கள் இணைத்து
அறுத்து அகற்றிய
தீண்டாமை யோசனை…
நிறைந்த இனிப்பில்
திகட்டாத நா….
வகுப்பறை…
வேதியியல் வினையில்
கவிதை பிரசவித்த
களஞ்சிய கூடம்…
தமிழால் நா தாகம்
தீர்த்த தண்ணீர் பந்தல்…
உயிரியலென பிரபஞ்சம்
பார்வையிட்ட
நகராச் சுற்றுலா
அந்த வகுப்பறை…
சாரல் மொழி
சமிஞைகளால்வெற்றிடமானது
அந்த வகுப்பறை…
அன்று கிறுக்கிய
எழுத்துகளின் முயற்சி
இன்று கிறுக்குகிற
கவிதைகளின் தொடர்ச்சி….
அள்ளிக் கொடுத்தது
அந்த வகுப்பறை…
அன்றும் புதியதாயில்லை
இன்றும் பழையதாயில்லை
என்றும் மறைவதாயில்லை
எந்தன் வகுப்பறை…
வாடைக் காற்றால்
இடைவெளியானது
வகுப்பறைக்கும் எனக்கும் …
தென்றல் காற்றால்
இணைவானது இந்நொடி
வகுப்பறைக்கும் எனக்கும்…
-சரவணன் கந்தசாமி...
Comments