இயல்பின் முரணாய்
இலக்கணப் பிழைத்தமிழாய்
கனவோடும் கவிதையோடும்
கைகட்டி பேசி சிரிக்கும்
அரைப் பித்தன் நினைவுகளில்
தாமாக வந்து திரி தீண்டி
எண்ணெய் ஊற்றுகிறாய்!...
கேளியும் கிண்டலுமாய்
கடந்துபோன என் கனவுக்காலம்
விரட்டும் மிருகமாய்
மிரட்டும் தென் வட துருவமாய்
கனவின் கோர்வையிலும்
மனதின் நினைவுகளிலும்
வெடித்து சிதறுகிறது!...
விழியில் ஊசி குத்தி
இதயத்தை தைத்து அது
மீண்டும் இமைகளில் எடுப்பதாய்
எத்தனை ஏமாற்றங்கள்!...
துவண்டு உழன்று வீழ்கையிலே
ருசித்து எழுவதற்காக
எத்தனை ஏளனங்கள்!...
பள்ளிக்கல்வியின் பாடங்கள் முதல்
பட்டதாரி வேலை விண்ணப்பம் வரை
அனைத்தும் என்னை வடிகட்டி
ஏளன முத்தமிடும்போது
எண்ணியதை எட்டத்துடித்த
எழுதாத மேடைப்பேச்சு
இத்தனையும் இமைகோதி
இதயம் வீங்கி
வரத்துடிக்கும் குருதி
கண்ணீராய்!...
மொழியில்லா வடிநீராய்!....
உள்ளுக்குள் உடைந்து
உணர்வை தீண்டும் போது
எட்டிபிடிக்க உன்னை
தட்டிப்பறிக்க (கனவை)
ரண வெறி தொற்றும்
மனதிற்கும் அறிவிற்கும்
இடையிலான வாழ்வியல் போராட்டம்!...
இத்தனை கடந்திங்கு
இளைப்பாற நிலையிட்டேன்!...
தலைகோதி மனதைப் பறிக்க
இப்போது ஏன் வருகிறாய்?..
பால்யத்தின் தொடக்கத்தில்
பார்த்த அழகினை
நீ கண்டுவிடக்கூடாதென்ற பயத்தில்
நான் கண்ட நினைவினை
அன்றே உன்னிடம் சொல்லியிருக்கலாமென்று
நண்பர்களும் நண்பிகளும் நறுக்கென்று
திட்டுகிறார்கள்!...
எதற்கும் உதவாதவனென்றும் வசைப்பாட்டு
ஆம் உதவாக்கரை தான்...
என் ரசனை அவளை பாதிக்கக் கூடாதென்ற
அடுத்த வகுப்பை அவள் தொடரவேண்டுமென்ற
கல்வியை மட்டுமே வைத்துக்கொண்டு
அவளை கரம்பிடிக்க முடியாதென்ற
எண்ணிய கனவை மனதில் சுமந்து
இமயத்தின் உச்சியை பார்த்து நின்ற நான்
எதற்கும் உதவாதவன் தான்!...
இதை உன்னிடம் சொல்வதற்கு தயக்கமுமில்லை
சொல்லாமல் இருக்க மயக்கமுமில்லை
என்னோடு உறைந்த உந்தன் மொழிகள்
உந்தன் நினைவாய் என்னோடே மறையட்டும்
என்றும் உன் மன ஏகாந்தத்தில்
புதுமை புன்னகை தவழட்டும்!...
இந்த மடயனின் வார்த்தைகள்
இதையன்றி வேறு என்ன எழுதும்?...
-சரவணன் கந்தசாமி...
No comments:
Post a Comment