சில மாதங்களுக்கு முன்னர் ,
அதிவேகமாக தமிழகத்தில்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள்
வரை டெங்கு பாரபட்சமின்றி பரவி பல உயிர்களை பலிதீர்த்த
நேரம். எனது தங்கைக்கும் விடாத காய்ச்சலினால் தேனி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றோம் .
தங்கையை பரிசோதித்த மருத்துவர்கள் சாதாரண வைரஸ் காய்ச்சல் என்றும் இருப்பினும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று செல்லும்படி அறிவுறுத்தினார்கள்.
தீவிரமான காய்ச்சல் பரவி வரும் இவ்வேளையில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவது தான் சரியென்று தோன்றியது.
ஒருவழியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சைகள் தொடர்ந்தன.தங்கையை பார்த்துக் கொள்ள சித்தி மருத்துவமனையில் இருக்க அன்றிரவு வீட்டுக்கு சென்று விட்டு மறுநாள் காலையில் மருத்துவமனையினுள் நுழைந்தேன்.
பரபரப்புக்கு பஞ்சமில்லாத நுழைவுவாயில், வாகன விபத்தாளர்களின் உயிரைக் காப்பதற்காக அதிவேகமாக உள் நுழையும் அவசர ஊர்தி ,
சகல ஆட்டங்களையும் போட்டுவிட்டு உயிர்பிரிந்த உடலாய் பிணமென்ற வாய்மொழியில் பெயரிடப்பட்ட சடலத்தினருகே உண்மையான பாச்த்தோடு நான்கு இமைக் கதறல்கள், நாமும் அழுதாக வேண்டும் இல்லையென்றால் பாசமில்லையென்ற உண்மை தெரிந்து விடும் என்கிற அழுத்தத்தில் அழும்
எட்டு இமைக்கதறல்கள் இவற்றை சமாளித்து இரத்த உறவு ஒன்றை பிணத்துடன் அழைத்துக்கொண்டு மிதவேகமாக வெளியேறுகிறது அமரர் ஊர்தி மருத்துவமனையின் வலது இடது நுழைவுவாயில் "கேட்"கள் எப்போதும் இவற்றின் வருகைக்காக திறந்து கிடக்கின்றன.
கூட்டம் கூட்டமாக கலந்துரையாடிக்கொண்டு மருத்துவமாணவர்கள் , இவர்களின் கைகளில் ஸ்டெத்தஸ்கோப் ,அணிந்திருக்கும் வெள்ளை கோட் மற்றபடி ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கு மாணவர்கள் முகங்களில் நேர்த்தியான மூக்குக் கண்ணாடி
இத்தனையையும் மெல்ல கடந்து குழந்தைகள் காய்ச்சலுக்கான அவசர பிரிவை அடைந்தேன்.
மருந்து வாடையும் ஊசித் திணிப்புகளும் சிலாகித்துக்கிடக்கும் இந்த பிரிவு ஏனோ சுத்தமாகத்தான் இருந்தது.
முதன்மை மருத்துவர்கள் முதல் மருத்துவம் பயில்பவர்கள் என அவசரமாக திடீர்திடீரென ஆய்வுக்கு வந்து செல்வார்கள். தற்பொழுதும் அவ்வாறே வந்திருந்தார்கள், ஒரு குழந்தையின் தாயிடம் குழந்தையின் காய்ச்சல் நிலை பற்றி தமிழில் கூறிவிட்டு தங்களுக்குள்ளாக மருத்துவமொழியில் பேசிக்கொண்டிருந்தவர்களை அந்த குழந்தையின் தாய் ,
வெளிக்கடையில் பாலிதீன் பையில் வாங்கி வந்த தேனீரை கையில் பிடித்துக்கொண்டு என் குழந்தைக்கு எப்படியாயினும் சரியானால் போதுமென்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.
இதே பிரிவில் ஆறு மாதக் கைகுழந்தை அதீத காய்ச்சலினால் அழுது துடித்துக் கொண்டிருந்தது குழந்தையின் காய்ச்சலை தாயால் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை.மருத்துவர்கள் பரிசோதித்து சில மருந்துகளை அக்குழந்தைக்கு கொடுத்தார்கள் காய்ச்சல் படிப்படியாக குறையுமென்றும் கூறினார்கள் . மருத்துவர்கள் என்ன கூறினாலும் குழந்தைக்கு மருந்து கொடுத்தால் உதட்டை சுருக்கிக் கொண்டு விழுங்க மறுத்துவிடுகிறது. ஊசி போடுவதற்கு நரம்பினை தேடுகிறார்கள் கிடைக்கவில்லை சில நிமிட தொடர் தேடலுக்கு பின்னர் நரம்பில் ஊசி போடுகிறார்கள்.
அக்குழந்தை தாயின் மடியில் படுக்க இயலாமல் அலைமோதி கத்தித் துடிக்கிறது.
இளம் பிஞ்சுகளின் இத்தகைய கதறல்களை பார்த்துக் கொண்டே கட்டிலின் நுனியில் அமர்ந்திருந்த நான் தங்கையை தொட்டுப் பார்த்தேன் காய்ச்சல் கொஞ்சம் குறைந்திருந்தது தங்கையை கவனித்துக் கொள்ளும் சித்தியிடம் சொல்லிவிட்டு மெதுவாக வெளியேறினேன் .
காசுக்கும் ,பதவிக்கும் ,தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்வதற்கும் பல அயோக்கியத்தனங்களை செய்யும் அயோக்கியர்கள் எல்லாம் வெளியில் சுகவாழ்வு வாழ , இக்குழந்தைகளுக்கு ஏன் இறைவா இத்தனை வலிகளை கொடுக்கிறாய்? என நொந்து கொண்டு சக்கரகட்டில் செல்லும் சறுக்கல் பாதைவழியே கீழிறங்கி இரத்த வங்கியின் வராண்டாவில் சென்று அமர்ந்தேன்.
இறைவனை வேண்டுவதை தவிர இவ்வேளையில் வேறொன்றும் செய்வதற்கில்லை என்று சிந்தித்துக்கொண்டிருந்தபோது
முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவர் என்னருகே வந்தமர்ந்தார்.சிறிது நேர மெளனத்திற்கு பிறகு என்னிடம் பேசத்தொடங்கினார்.
தம்பி உங்கள காய்ச்ச வார்டுல பாத்தேன் நீங்க யார கூட்டிட்டு வந்திக்கீங்க தம்பின்னு கேட்டாரு.
அதற்கு நான்,
என்னோட சித்தி மகளுக்கு காச்சண்ணே , நாளு அஞ்சு நாளா இருக்கு டாக்டர் செக் பண்ணிட்டு இங்க தங்கிடச் சொன்னாங்கனு சொன்னேன்.
அதற்கு அவர் ,
சரிதான் தம்பி , நாளு நாள் ஆனா என்ன , பத்து நாளு ஆனாக்கூட பொறுமையாய் பாருங்க தம்பி, களவாணிப் பய காச்ச பாடாப்படுத்துய்யானு சொல்லிக்கிட்டு இருந்தவர்கிட்ட
நான் கேட்டேன்,
நீங்க யார கூட்டிட்டு வந்திருக்கீங்கனு கேட்டேன்
அவர்,
அந்த வார்டுல ரொம்ப நேரமா விடாம அழுதுகிட்டே இருந்துச்சே அது என் புள்ள தான்ய்யா இருபது நாளா காச்ச தம்பி இன்னும் சரியானபாடில்ல காச்ச வந்தவுடனே கம்பம் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் வைத்தியம் பாத்தோம் அஞ்சு நாள் கழிச்சு டாக்டர்ங்க கானா விலக்கு ஆஸ்பத்திரிக்கு போக சொல்லி இங்க அனுப்பிட்டாங்கனு சொல்லி முடிக்க
நான்,
அண்ணே இந்த காலத்துல மருத்துவம் எவ்வளவோ முன்னேறிடுச்சுண்ணே இந்த சாதாரண காச்சலுக்கு போய் இப்படி கவல படுறீங்க , முதல்ல நம்பிக்கை வைங்க அண்ணே எல்லாமே நல்லதாய் நடக்கும்னு சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடி
அவரின் ,
இமைக்கரையில் தேங்கியிருந்த கண்ணீர் கொட்டத்தொடங்கியது.
தொடர்ச்சியாக அழுதுகொண்டே பேசினார் ,
பச்ச புள்ள தம்பி , ஊசி போடுறதுக்கு நரம்பை கண்டுபிடிச்சு ஊசிபோட்டாங்க , மருந்து குடிக்க மாட்டிங்குது தம்பி, டாக்டர்ங்க வர்றாங்க ஊசி போடுறாங்க காச்ச குறையும்ணு சொல்றாங்க . ஆனா, இன்னவரைக்கும் காச்ச குறையல தம்பி, டாக்டர்ங்க என்ன காச்சனு எதுவும் சொல்ல மாட்டிங்குறாங்க தம்பி, எனக்கு தெரிஞ்சதெல்லாம் என் பொண்டாட்டி , பிள்ள , மம்பெட்டி வேலை தான் மத்தபடி வெளியுலகமெல்லாம் தெரியாது தம்பி. என் பொண்டாட்டி , பிள்ளையை பாத்து தவிச்சு மருகிறா என்னாலயே தாங்க முடியல அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியாம உடஞ்சு அவ முன்னாடிஅழுதிடக் கூடாதுன்னு வைராக்கியமா இருக்கேன் . ஏய்யா , பேசாம
மதுரைல மிஷின் ஆஸ்பத்திரி , தனியார் ஆஸ்பத்திரினு எங்கையாச்சும் கொண்டு போய் பாக்கலாமாய்யா? எங்கிட்ட அம்புட்டு வசதி இல்ல ,இருந்தாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு என் பிள்ளய காப்பாத்தனும்ய்யா உனக்கு ஏதும் ஆஸ்பத்திரி தெரிஞ்சா சொல்லுன்னு தீராத அழுகையோட சொல்லி முடிச்சாரு.
இருபது வயது இளைஞனாக எனது சக நண்பர்கள் அழுவதைக்கூட நான் பார்த்ததில்லை , அவர்களை அழுவதற்கும் விட்டதில்லை.
தன் குழந்தைக்காக சிறு பிள்ளையாக அழுது புலம்பும் , என்னுடைய அனுபவத்தை வயதாய் கொண்டிருக்கும் தகப்பன் பொறுப்பிலான அவரின் கண்ணீர் என்னை திக்குமுக்காடச் செய்தது.
பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் , தன்னை திரியாக்கி பிள்ளைகள் இந்த உலகில் நன்றாக பிழைத்தக் கிடந்து ஒளியாக படர எத்தனை பெற்றோர்கள் தன்னையே துன்புறுத்திக் கொள்கிறார்கள்.
தொடர்ந்தேன் ,
இப்ப வர்ற காய்ச்சலெல்லாம் பயங்கரமானது தான் அதே சமயம் நம்மலோட மனதிடத்தினை மீறி நம்மை பாதிக்காதுன சொல்லுவாங்க இத குழந்தைக்கு புரிய வைக்க முடியாது. இருந்தாலும் நீங்க தைரியமா இருக்கணும், உங்க நம்பிக்கை தான் உங்க மனைவிக்கு இரட்டிப்பு நம்பிக்கையை கொடுக்கும் .இது நிச்சயமா உங்க குழந்தைய காப்பாத்தும்ண்ணே.
இப்ப வர்ற மோசமான காச்ச உங்க குழந்தைக்கு இருக்காதுன்னு நம்புறேன் . டாக்டரு சாதாரண காச்சனு தான் சொல்ல போறாங்க பாருங்க.
அதே சமயம் , மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு போறது சரியா தோனல. இப்போ வர்ற காச்சலுக்கு அரசாங்க ஆஸ்பத்திரில தான் மருந்து பெரும்பாலும் இருக்கு. அதுமட்டுமில்லாம தனியார் ஆஸ்பத்திரில காசு சாம்பாதிக்கிறதுக்காக சரியாகிடும்னு சொல்லிக்கிட்டே என்ன காச்சன்னு அவ்வளவு சீக்கிரம் சொல்ல மாட்டங்கண்ணே.
இங்க இருந்து "டிஸ்சார்ஜ்" பண்ணி கூட்டிட்டு போயிட்டு திரும்ப வந்தா இங்க சேக்க மாட்டாங்கண்ணே .
எனக்கு தெரிஞ்ச அளவு இங்க ட்ரீட்மெண்ட் நல்லாதான் இருக்கு .வெளில தனியார்ல போய் காரணமில்லாம காச செலவு பண்ணாதீங்க .இங்க பாக்க முடியாதுன்னு சொன்ன கூட நீங்க சொல்ற தனியார் ஆஸ்பத்திரி பேச்சு சரி.ஆனால் நல்ல பாக்குறாங்கண்ணே.
அப்புறம் நம்மலால தனியார் வைத்தியம் பாக்குற அளவுக்கு சத்து இல்லண்ணே .
பாப்பாவுக்கு சரியாகும் நீங்க மட்டும் தைரியமா இருங்கண்ணே னு சொல்லி முடிக்க , அவரின் மனைவி , ஒரு மாத்திர OP ல இல்லங்க வெளில இத வாங்கிட்டு வாங்கண்ணு சொல்ல போயிட்டு இந்தா வர்றேன் தம்பின்னு சொல்லிட்டு போனாரு.
அவர் முன்னாடி விழவிரும்பாத என் கண்ணீர் இப்போது கண்ணத்தில் வழிய சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டேன் . அதன்பிறகு அந்த வார்டில் அவரிடம் பேசுவதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை வேறொரு வார்டிற்கு மாறிட்டாங்க.
தங்கைக்கு கய்ச்சல் சரியாகி வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம் .பிறகு நான் அவரை பார்க்கவில்லை எனினும் குழந்தைக்கு காய்ச்சல் சரியாகி மருத்துவமனையிலிந்து சென்றிருப்பார்கள் என்று நம்புகிறேன்.அவ்வாறு சென்றிருக்க வேண்டுமென இறைவனை பிரார்த்திக்கிறேன்..
அந்த குழந்தைக்காக பிரார்த்திப்பதை தவிர வேறொன்றும் என்னால் செய்ய இயலவில்லை....
-சரவணன் கந்தசாமி...
No comments:
Post a Comment