அவன் கண்டான்....
அழகான அளவான
நெற்றியில் ஆகச்சிறிய
பொட்டு இட்டு
புருவப்பாதைகளைத் திருத்திக்கொண்டு
நாசியும் கண்ணும்
புருவமும் உச்சியும்
புடை சூண்டு நிமிர்ந்திருக்க
இரும்பின் வலிமையென
இளகிய கழுத்தும்
இன்னொரு சபதமாய்
எழுந்து நிற்கும் தோள்களில்
திமிரினை காணாத
திரட்சி தைரியத்தில்
அவன் கண்ட அவள்
மார்பு திரை மலிந்து விலகிடின்
தீச்சுட்ட இடமாய் திருத்தும் மாண்பு!...
காளைகள் அடக்க இடுப்பில்
சேலை ஏற்றி செருகி
களத்திற்கு வரும் வல்லமை!...
உண்மைக்கு உயர்த்தவும்
பொய்மைக்கு ஓங்கவும்
உருவான கைகள்
பூமிக்கு வலியாது
புழுக்களை இடராது
நடந்து வரும் கால்களுக்கும்
நிமிர்வு இருப்பதாய் கண்டான்!...
அத்தனையும் மெய்த்தது கவிஞா!..
உன் பார்வைகள் அத்தனையும் மெய்த்தது!...
அது
நாகரீகத்தில் மேலும் பொய்த்தது கவிஞா!...
வரைபடம் வரைகிறாள்
வாக்கியம் எழுதுகிறாள்
வகைப்பாடில்லாத நெற்றியில்
மழைக்கு பயந்தோடுகிறாள்
ஒப்பனைகள் கரைந்து
கலைந்து விடுமாம்
நகப்பூச்சுக்கும்
மருதாணிக்கும் கை சிவக்கும் அழகு
காதுகளின் துவாரங்களில்
கத்தி மாட்டுகிறது...
முழுவதும் மூடாத டி−சர்ட் இறுக்கங்கள்
முதல் பித்தான் திறந்த சட்டை
இவ்வகை மேலாடை
ரம்மியத்திற்கு முழுவதும்
பழக்கப்பட்டாள்...
தொலைக்காட்சி
அரங்கத்திற்கு வருபவள்
அரைடவுசரில் வருகிறாள்..
புலவா !.....
நீ கண்ட நிமிர் நடை
இடரா பாதம்
செருப்புகளின் அலைவரிசையில்
செத்துப்பிழைக்கிறது
இப்பாதங்களில் தளர்வு நிறைந்துள்ளது கவிஞா!...
ஆணி வேர் தத்துவம்
ஆணுக்கு நிகரென்ற சமத்துவம்
ஏற்கிறேன் குருவே!...
அடுப்பங்கரை சுதந்திரம் ஆனது இங்கே!...
உன் ஆசைப் படிப்பில்
முதல் மூன்றும் பெண்கள் குருவே!...
பதுமைகள் நெறியினூடும்
பவளங்கள் அறிவுனூடும்
புதுமைகள் கண்டாய் எம் தலைவா
அறிவினில் உந்தன் தாக்கம்
அளவில்லாமல் பழித்தது ...
பெண்மையின் நெறியினுள்
சற்று பொய்த்தது −இந்த
நாகரீகமெனும் ஊடுகலப்பினால்!...
இந்நொடியிலும்
உன் பார்வைக்கோர்வையில்
நடந்துயரும் கோடி மகளிரும்
போற்றுதலுக்குரியர்...
என்பதறிவேன்...
நாகரீகமும் ஆடம்பரமும்
அமிழ்நத இந்நூற்றாண்டில்
நீ கண்ட புதுமைப் பெண்கள்
எங்கே "மகாகவி"?
எனது கவிதைகளின் மீதான தங்களின் பார்வையிடுதலுக்கு
மெத்த மகிழ்ச்சியுடனான நட்பு நன்றிகள்......
-சரவணன் கந்தசாமி
29-01-2018