இளஞ்சிவப்பில் இன்னொரு நினைவுகள்
எழ முயற்சித்து விழும் குழந்தையாய்
தினமும் உன்னை எழுத நினைத்து தோற்றதில்
என்னை மிஞ்ச எவரும் இல்லை இங்கு….
விரைவாய், காதல் திரையாய்
விழும் வார்த்தைகள் வழுக்கி உடைகின்றன…
மதயானையை அடக்க எத்தனிக்கும் வீரனாய்
எழுத்தின் தோல்வியை என்னுள் புதைத்து
உனதுருவில் கவிதைகளை கட்ட நினைக்கிறேன்
தமிழ் சலவைக் கற்களை பட்டை தீட்டி
தாஜ்மஹால் அளவு இல்லையெனினும்
தரமான ஓலைக் குடிசை பின்னத்துடிக்கும்
நானும் சாஜஹான் தான்…
எழுத்தின் முதலாய் பிள்ளையார் சுழி
எல்லாவற்றின் முதலாய் மதத்தை முன்னிறுத்தவில்லை
இறைவனை முன்னிறுத்துகிறேன்…
முதன்முதலாய் நட்டு வைத்த மாங்கன்று
வளர்ந்து உயர்ந்து முதிர்ந்து
பிஞ்சாகி காயாகி கனியாகி- அதன்
அமுதமெனும் காதல் சுவையில்
சிறகு விரித்து
கனவுகளில் உயரப் பறக்கிறது…
மார்கழி அடர்குளிரில்
இறுக்கி அணைத்திட எண்ணும்
பெரும் தீயின் இளஞ்சூட்டை
தொடாத தூரம் நின்று
படாத தேகம் இங்கே
கதகதப்பை அள்ளிக் குளித்து
கரையேறும் வடதுருவ
கரடிபோலே ஆனந்த தாண்டவம்
அதிலொரு ஏக்கச் சிந்தனை
என்னவளை நினைந்திடின்
இருதயமும் மூளையும்
இடம்மாறி அடித்துக் கொள்கின்றன…
நீ…
என் மாமன் கரிகாலன் வம்சத்தின்
கடைசி இளவரசி
உன் தகப்பனின் கல்லணை போல
ஓர விழி பார்வையிலே தாளமிட்டு
பொய்யாக கோபப்பட்டு
மெய்யாக உனக்குள்ளே
மெழுகு உருகும் புன்னகையில்
காதல் காற்றாற்று வெள்ளத்தின்
தடுப்பணைக்கு சொந்தகாரி…
பிற பெண்மைக்கு வகுபடாத
அசட்டு புன்னகை…
பாரதியின் சாயலில்
அதிலொரு நாணம்….
திருட நினைத்த முகச் சாயலில்
புத்தன் பெறாத ஞானம்- என்
புத்தி பெற்று நின்றிட
நீ மந்திரவாதி
நான் தந்திரவாதி….
இடமோ வலமோ எதுவாயினும்
இமையை விலக்கி விட்டு
தேடாத தோணியில் எனைத்தேடும்
இந்த கருவிழி அச்சுப்பொறியை
கூகுளின் காதலுக்கான தேடுபொறியாய்
மாற்றியமைக்க அண்ணன்
சுந்தர் பிச்சையிடம் வேண்டுகோள்
வைத்திருக்கிறேன்.
-சரவணன் கந்தசாமி...