ஆஷிஃபாவுக்கும் மணீஷாவுக்கும்
நிர்பயாவுக்கும்
நிசப்த அஞ்சலி செலுத்த!...
இன்னும் எத்தனை நிர்பயாக்கள்
நம் கண்ணுக்கு புலப்படாதவர்களோ?
பால் மணம் மறக்காத
பச்சிளம் குழந்தையும்
அறுபதை கடந்து நிற்கும்
மூதாட்டிகளும்
உடலை வைத்து வேடிக்கையாய்
அப்படியென்ன செய்து விட்டார்கள்?
அப்படி என்ன தான் செய்ய முடியும்?
ஆணவக்காரனே
ஆண் குறியொன்று இருந்துவிட்டால்
உமக்கு அடிமையா
இந்த அத்தனை பேரும் ?
குழந்தை மொழி பார்த்தும் கூட
அந்த மென்மை சதையை தொட்டும் கூட
காமம் உன்னை கவ்விக் கொண்டால்
உன் இதயம் என்ற ஒன்றை
அறுத்து நீ வெளியே வை!...
உலகில் வஞ்சகமற்றது குழந்தை மொழி
உமக்கு வஞ்சகமாய் தெரிவது ஏனோ?...
கவர்ச்சி என்ற ஒன்றை நீ
காட்டி விடு குழந்தையிடம்
மறுமைப் பிறப்பில்
மனிதம் இல்லாமல் போகட்டும்
அறுபது கண்ட கிழவியிடம்
அப்படி என்ன நீ கண்டாய்?...
வெறும் , தோலை ருசிக்கும் மிருகமாயின்
உன்னை வேட்டையாடி தீர்ப்போமே!...
எத்தனை கனவுகள் சுமந்திருப்பாள்
எதிர்காலம் ஒன்றை வரைந்திருப்பாள்
அத்தனையையும் அழித்தொழிக்க
அவள் உடலை நீயும் துளைத்தெடுக்க
அதிகாரம் கொடுத்தது எவரடா?...
ஆணென்ற சாக்கில் அதிகாரமெனில்
அறுத்தெறிவோம் உன் ஆணுறுப்பை
சாதியை சொல்லி கற்பழிக்கும் – நீ
எனக்கு ஒரு சவமே!...
சாதியை கூறி
ஆணியம் போற்றி
அவள் உணர்வினை குடித்த
உம் குரல்வளை இரத்தம் தேடுகிறோம்...
”அவள் இறைவி” இந்த
மானங்கெட்ட உலகில் வாழாது
அமைதியை தேடிக் கொண்டாள்...
நீ இருப்பதோ நரகம்
நெடுங்காலம் இங்கே
வாழப் போகிறாய்?...
உன்னை அடையாளப்படுத்தும்
அவள் நாவை அறுத்தாய் –ஆனால்
உன்னை உனக்கு தெரியாதா
ஒரு தகப்பனுக்கு பிறந்தவனா என்று?...
கடவுள் எங்கே?......
மனமெல்லாம் நிறைகிறது கேள்வி
குறை நிறைந்த சமூகம் உருவாக்கிய
நாம் அனைவரும் குற்றவாளிகளே!...
பாலியல் பற்றி தெளிவுபடுத்தாத
நம் கல்வி முறை குறையே...
நிர்பயாவும் மணீஷாவும்
நெஞ்சிக்கூட்டை அறுக்கிறார்கள்
ஆணாய் மண்டியிட்டு
அழுவதை தவிர வேறொன்றும் தெரியவில்லை...
ஆணும் பெண்ணும் விரும்பிக் கொண்டால்
அது செக்ஸ்
இருவரில் ஒருவருக்கு விருப்பமில்லையேல்
அது வன்புணர்வு (அ) கற்பழிப்பு....
நேசித்து வாழுங்கள்
பெண்மையை போல
வாழ்வும் அழகாகும்!...
நேசத்தை திணிக்காதீர்கள்
அது தற்கொலைக்கு சமமானது...